ரங்கநாதர் கோவில் தேரோட்டம்
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
செஞ்சி,
செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் மூலவரான ரங்க நாயகி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
பக்தர்கள் சாமி தரிசனம்
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேரானது நான்கு மாடவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க.ஏழுமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி தண்டபாணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், முக்கிய பிரமுகர்கள் ஏழுமலை, சரவணன், மேலாளர் மணி, மணியம், இளங்கீர்த்தி, ஸ்ரீராம் ரங்கராஜ், பாலாஜி, சுரேஷ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.