அறிவியல் மையத்தில் ரங்கோலி போட்டி
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரங்கோலி போட்டி நடந்தது.
உலக புவி தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று 'பூமியின் எதிர்கால பாதுகாப்பிற்கான முதலீடு' என்ற தலைப்பில் குடும்ப ரங்கோலி வரைதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குடும்பத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்தனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரு குடும்பத்தில் 7 முதல் 10-ம் வகுப்புக்குள் படிக்கும் ஒருவர் மற்றும் அவரது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி இவர்களில் யாரேனும் ஒருவர் என 2 பேர் கலந்து கொள்ள தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் அறிவியல் மையத்துக்கு வந்து போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த ரங்கோலிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய அலுவலர் குமார், கல்வி அலுவலர் லெனின் ஆகியோர் செய்திருந்தனர்.