கடனுதவி வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது


கடனுதவி வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது
x

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்ட கடைசி இடதில் இருப்பதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வங்கியாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கான கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் பயனாளிகளுக்கு வழங்குவதில் உள்ள நிலுவைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டிற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.550 கோடி கடன் உதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இன்று வரை ரூ.311 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.239 கோடி கடன் உதவிகள் மார்ச் மாதத்திற்குள் வழங்க வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மகளிர் குழுக்களின் வங்கி கடன் உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

கடைசி இடம்

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. ஆகவே நிலுவையில் உள்ள கடன் உதவிகளை அடுத்த மாதத்திற்குள் கட்டாயம் வழங்க வேண்டும். மகளிர் குழுக்களுக்கு உடனுக்குடன் வங்கிக் கடன் உதவி வழங்குவதை மகளிர் திட்ட இயக்குநர் கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடனையும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வங்கியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்துதல் தொழில் முனைவோராகும் திட்டத்தில் இருந்து 145 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 84 விண்ணப்பதாரர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 61 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இதனை ஆய்வு செய்து அதற்கான வங்கி கடன்களை விரைவாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களுக்கு தினசரி கூலி வழங்குவதில் வங்கி கணக்குடன் 12,000 நபர்களுக்கு ஆதார் இணைக்காமல் உள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் சம்பளம் கிடைக்க பெறாமல் உள்ளது. இதை அனைத்து வங்கிகளும் ஆராய்ந்து முடிக்க வேண்டும். அடுத்த நிதியாண்டில் இப்பிரச்சினைகள் வரக்கூடாது.

புதுமைப்பெண்

மேலும் புதுமைப்பெண் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கப்படாத மாணவிகளுக்கு உடனடியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். பல்வேறு திட்டங்களில் வங்கிக் கடன் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ள வங்கியாளர்கள், பயனாளிகளின் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக கடன் உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்ன குமார், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம் மற்றும் அதிகாரிகள், வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story