செஞ்சி மலைக்கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை


செஞ்சி மலைக்கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, காதலியை பலாத்காரம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை பகுதியில் கடந்த 23.7.2016 அன்று ஒரு பெண், கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து செஞ்சிக்கோட்டையின் நினைவுச் சின்ன உதவியாளரான ராஜேந்திரன் என்பவர், செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணும், புதுச்சேரி ஜெயகணேஷ் நகர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி(34) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை விஜி, செஞ்சி மலைக்கோட்டை பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெரிய கருங்கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட விஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து விஜி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story