கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிப்பு


கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:20+05:30)

கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து மாநகரில் பாதுகாப்பு பணிக்காக அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜனதா அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பா.ஜனதா மண்டல தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை ஆகிய 3 இடங்களில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அவைகள் வெடிக்காததால் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

அடுத்தடுத்து நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மாநகரில் பரபரப்பான சூழல் நிலவியது.

சிறப்பு படை போலீசார் குவிப்பு

இதற்கிடையே கோவையில் கடந்த 2 நாட்களாக பா.ஜனதா கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய மறியல் போராட்டங்கள், மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நடத்தும் முழுஅடைப்பு போராட்டம் ஆகியவை காரணமாக மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக வெள்ளலூரில் உள்ள அதிவிரைவுப்படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக 4 கம்பெனி சிறப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ஆத்துப்பாலம் மற்றும் காந்திபுரத்தில் அதிவிரைவுப்படை போலீசார் துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் உள்ளிட்டவற்றுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

தீவிர வாகன சோதனை

கோவை மாநகரில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஒரு கம்பெனியில் 100 போலீசார் இருப்பார்கள். இவர்கள் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம், பா.ஜனதா கட்சி அலுவலகம், முக்கிய பள்ளி வாசல்கள் மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

உஷார் நிலையில் சோதனை சாவடிகள்

மாநகரில் உள்ள 11 சோதனைச்சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. மாநகரில் இருந்து வெளியே செல்லும் மற்றும் உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

11 சோதனைச்சாவடிகள் தவிர்த்து மாநகருக்கு வரும் பிற சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் கமிஷனர் உத்தரவை தொடர்ந்து ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதில் வந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதுடன், ஆவணங்களையும் சரிபார்த்தனர்.


---------------

(பாக்ஸ்) அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

--------

போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கோவை மாநகரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்வபத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஒவ்வொரு சம்பவத்திற்கும் தலா 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

Next Story