'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' அமைப்பின் முன்மாதிரி திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்


ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை அமைப்பின் முன்மாதிரி திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
x

‘ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' அமைப்பின் சார்பில் சென்னையில் நீர் பாதுகாப்பை செயல் படுத்தும் முன்மாதிரி திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

சென்னை

சென்னை,

நீர் பாதுகாப்பை செயல்படுத்தும் நோக்கில் 'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' என்ற அமைப்பின் சார்பில் முன்மாதிரி திட்டம் சென்னையில் காது கேளாதோர் மற்றும் பார்வை திறனற்றவர்களுக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் தொடங்கிவைக்கப்பட்டது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன், நெதர்லாந்து நாட்டுக்கான சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் ஹெங்க் ஓவிங்க், நெதர்லாந்து துணை தூதர் எவூட் டி விட், ஜெர்மனி துணை தூதர் மைக்கேல் குச்லர், 'கேர் எர்த் டிரஸ்ட்' அமைப்பின் சூழலியாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஜெயஸ்ரீ வெங்கடேசன், 'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' அமைப்பின் குழு தலைவர் ஏவா பென்னஸ், கங்கை நதி தூய்மைப்படுத்தும் தேசிய திட்ட பணிக்கான தொழில்நுட்ப செயல் இயக்குனர் டி.பி.மாதுரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின்படி, பள்ளியின் மைதானத்தில் இதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கு அருகில் இருக்கும் சுமார் 300 குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் 27 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு 2 நிலைகளில் சுத்திகரிக்கப்பட உள்ளது. சென்னையில் தீவிரமான, குறைவான பருவமழை காலங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும் இந்த திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியை நெதர்லாந்து அரசு வழங்குகிறது.

சுற்றுச்சூழல்-அமைப்பு அடிப்படையில் சீரமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அல்லது இயற்கை முறையிலான தீர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான நீராக மாற்றுவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. அதுமட்டுமல்லாமல், மழைநீரை சேகரிப்பதோடு, கழிவுநீரையும் சுத்திகரிக்கிறது. வடிகட்டுதல் முறையில் தோட்டங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வழிவகையும் செய்கிறது.

இதுபற்றி 'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' அமைப்பின் குழு தலைவர் ஏவா பென்னஸ் கூறும்போது, 'இந்த திட்டம் வெற்றி அடையும் போது, சென்னை மாநகரின் இதர இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். மயிலாப்பூரிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறோம். இந்த செயல் முறை மழைநீரை உறிஞ்சி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு, மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தையும் குறைக்கும்' என்றார்.


Next Story