திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை அணில்கள்


திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை அணில்கள்
x

திருச்சிக்கு அரியவகை அணில்கள் கடத்தி வரப்பட்டன.

திருச்சி

செம்பட்டு:

அரியவகை அணில்கள்

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கைப்பையில் ஏதோ ஒரு உயிரினம் இருப்பது போன்று தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரது கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 அரியவகை அணில்கள் இருந்தன. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

தப்பி ஓடிய அணில்

விசாரணையில், அந்த பெண் மலேசியாவை சேர்ந்த விஜயலட்சுமி என்பதும், அவர் தனது கைப்பையில் மறைத்து அரிய வகை அணில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த அணில்களை சோதனை செய்தபோது, ஒரு அணில் தப்பித்து ஓடி விமான நிலைய முனைய வளாகத்திற்குள் சென்றது.

அதனை பிடிக்க முயன்ற ஒரு அலுவலரின் கையை அந்த அணில் கடித்ததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் விமான நிலைய முனைய வளாகத்திற்கு வந்து அணிலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பி அனுப்ப...

இந்த நிலையில் அந்த அணில்களை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story