சாராயம் காய்ச்சும் கும்பலால் அழிந்து வரும் அரியவகை மரங்கள்


சாராயம் காய்ச்சும் கும்பலால் அழிந்து வரும் அரியவகை மரங்கள்
x

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சும் கும்பலால் அழிந்து வரும் அரியவகை மரங்கள் கண்டும் காணாமல் இருக்கும் வனத்துறை

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதியாகும். சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் பகுதியாகவும் இது அமைந்துள்ளது. இங்குள்ள மாலை மீது வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள் பச்சைப்பட்டு விரித்தாற்போன்று இருக்கும் காட்சியை காண கோடிக்கண் வேண்டும். மேலும் இங்கு கோமுகி அணை, ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், படகுகுழாம், சிறுவர் விளையாட்டு பூங்கா என பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்து இருப்பதால் கல்வராயன்மலையின் இயற்கை அழகை கண்டுரசிக்க உள்ளுர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

இப்படி இயற்கை எழில்மிகுந்து காணப்படும் கல்வராயன்மலையில்தான் சாராயம் காய்ச்சுதல், உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்தல் போன்ற சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருவது வேதனையாக உள்ளது. சாராயம் காய்ச்சுவதற்கு இங்குள்ள ஓடைகளில் பாய்ந்தோடும் தெளிந்த நீர், வெள்ளை மரத்தின் பட்டைகள் உள்ளிட்ட சில மூலப்பொருட்கள் இங்கு மிக எளிதாக கிடைப்பதால் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்கு மிகவும் வசதியாக உள்ளது. அதேபோல் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான விறகுகளுக்கு இங்குள்ள அரியவகை மரங்களை வெட்டி சாய்த்து பின்னர் அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விறகுகளாக பயன்படுத்து கின்றனர். இதனால் கல்வராயன் மலையில் அரியவை மரங்கள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிப்பதற்காக போலீசாரும் வனப்பகுதியில் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். என்றாலும் மர்ம நபர்கள் போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சாராயம் காய்ச்சி கடத்தி வருவதம் நடந்து கொண்டு இருப்பதால் இவர்கள் போலீசாருக்கு சிம்மசொப்பனமாகவே இருந்து வருகிறார்கள். சரி அப்படி என்றால் வனத்துறையினர் என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுகிறது. கல்வராயன்மலையில் இன்னாடு, வெள்ளிமலை, சேராப்பட்டு, பலப்பட்டு, கோமுகி, கள்ளக்குறிச்சி என 6 வனசரகம் செயல்பட்டு வருகிறது. இந்த 6 வன சரகத்திலும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் கல்வராயன்மலை போலீஸ் நிலையத்தில் 7 போலீஸ்காரர்கள் மட்டுமே இருப்பதால் பல ஆயிரம் சதுர கிலோ மீ்ட்டர் பரப்பளவுள்ள வனப்பகுதியில் 7 போலீஸ்காரர்கள் சாராயத்தை ஒழிப்பது என்பது இயலாத காாரியம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழைய முடியாது என்று ஒரு பழமொழி உண்டு. எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை இது நமது வேலை அல்ல என்று கண்டும் காணாமல் இருப்பதை விடுத்து காவல்துறையும், வனத்துறையும் இணைந்து கல்வராயன்மலையில் சாராய வேட்டை நடத்தினால் சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Next Story