கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கிய 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கிய 3¼ டன் ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கிய 3¼ டன் ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடாகாவிற்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார். அதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் மூர்த்தி, நேரு ஆகியோர் கொண்ட குழுவினர் கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அந்த வீட்டில் மூட்டை, மூட்டையாக 1½ டன் ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 25) என்பவர் ரேஷன் அரிசியை வீடு, வீடாக சென்று வாங்கி கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சரத்குமார், மேல்சோமார்பேட்டையை சேர்ந்த திருமூர்த்தி (23), அர்ஜுன் (28) ஆகிய 3 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மேல்சோமார்பேட்டையை சேர்ந்த கோபால் (25), பெத்ததாளப்பள்ளி சக்திவேல் (27) ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
கேட்பாரற்று கிடந்த மூட்டைகள்
இதனிடையே கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ மற்றும், வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சுல்தான் என்பவரது காலிமனையில் 35 சாக்கு பைகளில் தலா 50 கிலோ எடையளவில் 1¾ டன் ரேஷன் அரிசி கேட்பாரற்று இருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.