வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்


வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் திருமலை நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதேபோன்று கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் அருகே மாட்டுவாயன்கொட்டாய் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கர்நாடகாவுக்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த மணிவண்ணன், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (59) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story