ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ஆற்காட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ஆற்காடு பகுதியில் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 2 மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மொபட்டை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவைச் சேர்ந்த பிரேம்நாத் என்கிற சின்னா (வயது 44) என தெரியவந்தது.
இவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி ரெயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வாலாஜாவில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து, பிரேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.