ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி ஐயன் மற்றும் போலீசார் கோவில்பட்டி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி மகாராஜபுரம் காலனியில் ஒரு வீட்டின் முன்புள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அங்கு நின்று கண்காணித்த போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து மூட்டைகளை இறக்கினாராம். தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் பாளையங்கோட்டை கோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சங்கர் (வயது 31) என்பதும், அவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த தலா 40 கிலோ எடை கொண்ட 10 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சங்கரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கொம்பையா என்பவரை தேடி வருகின்றனர்.