ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை
கோவை
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ரேஷன் அரிசி கடத்தல்
கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16.10.2008-ம் அன்று பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கோவை-பாலக்காடு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக 120 மூட்டைகளில் 6 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
3 ஆண்டு சிறை
இது தொடர்பாக கோவை சிவானந்தாகாலனியை சேர்ந்த அன்வர் பாஷா (வயது 48), உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த ஆலிப்ராஜா (47) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்கு கோவை 4-வது கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அன்வர் பாஷாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் ஆலிப்ராஜாவை வழக்கில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜராகி வாதாடினார். இதில் அன்வர் பாஷா மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கோவை உள்பட 8 மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.