கொங்கானோடை கிராமத்தில் விரைவில் பகுதிநேர ரேஷன் கடை


கொங்கானோடை கிராமத்தில் விரைவில் பகுதிநேர ரேஷன் கடை
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

கொங்கானோடை கிராமத்தில் விரைவில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை

பொறையாறு அருகே நல்லாடை ஊராட்சியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் 900 பேர் அத்தியாவசிய பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் கடையில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து கொங்கானோடை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படுவதன் மூலம் கொங்கானோடை கிராம மக்களின் சிரமப்பட வேண்டியது இருக்காது. மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று இங்கு விரைவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஆய்வின்போது நல்லாடை ஊராட்சி மன்ற தலைவர் காவேரி ஜெயச்சந்திரன், ரேஷன் கடை விற்பனையாளர் அன்புநேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story