ரேஷன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:45 PM GMT)

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்

கடலூர்

கடலூர்

தனித்துறை

பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். பெண் பணியாளர்களை பாலியல் தொந்தரவு செய்யும் நாகை மண்டல இணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும்.

ரேஷன் கடை பணியாளர்களை அவதூறாக, ஒருமையில் பேசும் துணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சிறு விடுப்பு போராட்டம்

அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் நடராஜன் வரவேற்றார்.

போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் சீனுவாசன், அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் முஸ்தபா, வட்ட தலைவர் முரளி, செயலாளர் கார்த்திகேயன், தலைவர் கந்தன், சிவா, தமிழ்ச்செல்வன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

500 பேர் பங்கேற்பு

இருப்பினும் பணியாளர்களின் இந்த போராட்டத்தால் 250-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சிலர் ரேஷன் கடை வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றதாக மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


Next Story