கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள் வழங்கும் முறை செயல்படுத்தப்படும்
கைரேகை பதிவாகாதவர்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
கோவை
கைரேகை பதிவாகாதவர்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோவை ராமநாதபுரம் 80அடி ரோட்டில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர்,பொங்கல் தொகுப்பு வழங்கும் நடைமுறை மற்றும் அதற்கான பொருட்கள் வந்துள்ளதா என்று பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் அனை வருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு கிடைக்க பெறாதவர்கள் 13-ந் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
தி.மு.க. ஆட்சி
கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 285 ரேஷன் அட்டைதாரர்க ளுக்கு 1404 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
அனைத்து கடைகளிலும் 100 சதவீதம் பொருட்கள் வந்துவிட்டது. கரும்பு 90 சதவீதம் வந்து விட்டது. 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தான் உடல் சத்துமிக்க உணவுப் பொருட்கள சிறப்பு பொதுவினியோக திட்டத்தில் கொண்டுவந்து வழங்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். அது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிந்துரை செய்யப்படும்.
கடந்த ஆட்சியில் துண்டு கரும்பு வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க அரசு முழு கரும்பை வழங்குகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருவிழி பதிவு
வயல்வெளி மற்றும் கூலி வேலை செய்துவிட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரின் கைரேகை அழிந்து இருப்பதால் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறைக்கு விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். பயோமெட்ரிக் முறையும் இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
சிறுதானிய மாநாடு
முன்னதாக கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சிறு தானிய மாநாடு - 2023 - கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட அரங்குக ளில் 555 சிறுதானிய உணவு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதற்கான சான்றிதழை அமெரிக்காவில் உள்ள உலக சாதனை பதிவு அமைப்பின் நிர்வாகி கிறிஸ்டோபர் டெய்லர் முன்னிலையில் அமைச்சர் சக்கரபாணி கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், திட்டக்குழு உறுப்பினர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.