'காவிரி உரிமையை சரியாக கையாள தெரியவில்லை'- தமிழக அரசு மீது ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
காவிரி உரிமையை சரியாக கையாள தெரியவில்லை என்று தமிழக அரசு மீது ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
திருமங்கலம்
காவிரி உரிமையை சரியாக கையாள தெரியவில்லை என்று தமிழக அரசு மீது ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
பூத் கமிட்டி கூட்டம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகி கூட்டம் செங்கப்படை, கரிசகாலன்பட்டி, நேசநேரி, சிவரக்கோட்டை, எஸ்.பி.நத்தம் சென்னம்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. ஒன்றிய கழகச்செயலாளர் ராமையா தலைமை தாங்கினார். கூட்டத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட கழக அவை தலைவர் மு.சி.சோ.சி.முருகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பிரபுசங்கர், கண்ணன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் வாகைக்குளம் சிவசக்தி, கவுன்சிலர் சிவரகோட்டை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
காவிரி பிரச்சினை
தேர்தலின் போது, சொன்னதை செய்வோம், சொல்லாதை செய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.இதை நம்பி வாக்களித்த மக்கள் பரிதாபமாக உள்ளனர். மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு செய்து மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். 110 விதியின் கீழ் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள்.
520 தேர்தல் வாக்குறுதி கொடுத்து 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்-அமைச்சர் பச்சை பொய் கூறினார். அதேபோல் மானிய கோரிக்கைகள் பல்வேறு அறிக்கை, வேளாண் பட்ஜெட்டில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டு நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறும் முதல்-அமைச்சர் விவசாயிகள் பற்றி சிந்திக்கவில்லை,
நான் டெல்டாகாரன் என்று கூறுகிறார்.ஆனால் இன்றைக்கு கர்நாடகா, தமிழ்நாடு மாநில உறவுகள் படும் மோசமாக உள்ளது. காவிரி உரிமையை சரியாக கையாள தெரியாமல் முதல்-அமைச்சர் தொடர்ந்து மவுனமாக இருக்கும் மர்மம் தெரியவில்லை. காவிரிபிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஆணைய தீர்ப்பு, ஒழுங்காற்று தீர்ப்பு உள்ளிட்டவற்றை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.