பிரதமர் வீட்டு வசதித் திட்ட தொழில்நுட்ப உதவியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் - ராமதாஸ்
தொழில்நுட்ப உதவியாளர்களை மீண்டும் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை ,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வந்த தொழில்நுட்ப உதவியாளர்களை தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி முடிக்க வேண்டிய தேவை இருந்தது. அந்த பணிகளை முடிப்பதற்காக பொறியியல் துறையில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்து 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஊராட்சி முகமை சார்பில் நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர். முதற்கட்டமாக 1236 பேர் தொழில்நுட்ப உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட வேண்டிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தொழில்நுட்ப உதவியாளர்களாக பணியாற்றி வந்த அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1236 பேர் தொழில்நுட்ப உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல்வேறு காலகட்டங்களில் பணியிலிருந்து விலகி விட்டனர். இத்தகைய சூழலில் பணியில் தொடர்ந்த 800 பேர் வேலை இழந்துள்ளனர்.
தொழில்நுட்ப உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு பணியாற்றி வந்தனர். தொழில்நுட்ப பணியாளர் பணி தான் அவர்களுக்கு அடையாளத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கியது. இது தொடரும் என்ற நம்பிக்கையில் பலர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்படி வீடு கட்டும் பணிகள் முடிவுக்கு வந்து விட்டாலும், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலும் பொறியியல் சார்ந்த பணிகளும், அளவீடு செய்யும் பணிகளும் உள்ளன. அந்த பணிகளை செய்யும் வகையில் பணி நீக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். என தெரிவித்துள்ளார்