இறந்த குழந்தையின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை
இறந்த குழந்தையின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்சி உறையூர் மேலக்கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ஞானசுந்தரி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஞானசுந்தரி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த 20-ந் தேதி மாலை குளியல் அறைக்கு சென்றபோது, திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சுதாகர் தனது மனைவியையும், பிறந்த குழந்தையையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து இறந்த குழந்தையின் உடல் உறையூர் கோணக்கரை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மேற்கு தாசில்தார் ஷேக் முஜ்பூப் முன்னிலையில், கோணக்கரை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவமனை டாக்டர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மீண்டும் அந்த குழந்தையின் உடல் அங்கு புதைக்கப்பட்டது.