மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. ஒரு சில இடங்களில் காவிரி ஆற்று கரையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதாவது நேற்று முன்தினம் காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 77 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இரவு வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதனிடையே நேற்று இந்த நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி, வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. மதியம் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நேற்றைய நீர்மட்டம் 120.06 அடியாக இருந்தது.

பாதுகாப்பு பணி

நீர்வரத்து நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் காவிரி பாலம், மேட்டூர் 16 கண் பாலம் அருகே உள்ள புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதை புதுப்பாலத்தின் மீது நின்று ரசித்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தற்போது இதைக்காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர்-சேலம் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள தங்கமாபுரிப்பட்டணம் பகுதியில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்படும் உபரிநீர் வழிந்தோடும் பாதையின் கரையில் நின்றவாறு தண்ணீர் ஆரவாரத்துடன் வெளியேறும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

ஆபத்தான செயல்

இதன் காரணமாக மேட்டூர் தங்கமாபுரிப்பட்டணம் நுழைவுவாயில் பகுதியில் இருந்து அனல் மின் நிலைய புதுப்பாலம் வரை உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் மக்கள் கூட்டமாகவே காட்சியளிக்கிறது. தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருவதால் பொதுமக்கள் யாரும் தண்ணீர் அருகே செல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சிலர் போலீசார் பிடியில் சிக்காமல், உபரி நீர் வழிந்தோடும் பாதையின் அருகே சென்று ஆபத்தை உணராமல் தண்ணீர் பாய்ந்தோடும் அழகை ரசிக்கிறார்கள்.

தங்களுடைய பாதுகாப்பை தாங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் என்பதை உணராமல் விளையாட்டுத்தனமாக தண்ணீர் பாய்ந்தோடும் காவிரிக்கரை அருகே சுற்றுலா பயணிகள் செல்வது மிகவும் ஆபத்தான செயலாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும், ஆபத்தான கரையோரங்களுக்கு செல்லக்கூடாது, ஆபத்தான வகையில் செல்பி எடுக்க கூடாது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story