வெள்ளியணை கிளை நூலகத்தில் அமர்ந்து படிக்க இடமில்லாமல் வாசகர்கள் அவதி


வெள்ளியணை கிளை நூலகத்தில் அமர்ந்து படிக்க இடமில்லாமல் வாசகர்கள் அவதி
x

வெள்ளியணையில் 30 ஆயிரம் புத்தகங்களுடன் இயங்கும் கிளை நூலகத்தில் அமர்ந்து படிக்க இடமில்லாமல் வாசகர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கிளை நூலகம் திறப்பு

ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமானால் கல்வியும், அறிவும் பெற்ற மனிதர்கள் அங்கு நிறைந்திருக்க வேண்டும். கல்வியை வழங்குவதில் கல்வி நிலையங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அறிவை வளர்ப்பதில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே இடத்தில் கொண்டிருக்கும் நூலகத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

அதனால் தான் ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்றனர் நமது முன்னோர். இதை கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு பொது நூலக துறையை ஏற்படுத்தி அதன் மூலம் நகரம் தொடங்கி குக்கிராமம் வரை நூலகங்களை அமைத்துள்ளது. அந்த வகையில் வெள்ளியணையில் 1964-ம் ஆண்டு கிளை நூலகம் தொடங்கப்பட்டது.

பொதுமக்கள் பயன்

இந்த நூலகத்தின் மூலம் வெள்ளியணை, ஒந்தாம் பட்டி திருமலைநாதன் பட்டி., வெங்கடாபுரம், செல்லாண்டிபட்டி, பச்சப்பட்டி, மாமரத்துப்பட்டி, ஜல்லிபட்டி, குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

அன்றைய நாளில் பொழுது போக்குவதற்கு புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒன்றே முக்கியமானதாக இருந்து வந்தது. இதனால் நூலகங்களை நாடி படித்த ஆண்களும் பெண்களும் அதிக அளவில் வந்து புத்தகங்களை எடுத்து சென்று படித்து வந்தனர்.இந்த நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.

தற்போது நூலகம் உள்ள இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிறிய வாடகை கட்டிடமாகும். இங்கு தற்போது புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதால் அமர்ந்து படிக்க முற்றிலும் இடம் இல்லை. தற்போது மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு விதமான போட்டி தேர்வுகளுக்கு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பயனுள்ளதாக இருப்பதால் அவற்றை எடுத்து படித்து அதிலிருந்து குறிப்புகளை எடுத்து செல்வதற்காக படித்த பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த நூலகத்திற்கு வந்து அமர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கோரிக்கை

இந்த நூலகத்திற்கு பின் தொடங்கப்பட்ட பல்வேறு நூலகங்களுக்கு விசாலமான இட வசதி கொண்ட நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நூலகத்திற்கு மட்டும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் பயனில்லாத நிலையில் உள்ளதாக வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, அதிகம் படித்த இளைஞர்கள் இளம்பெண்களை கொண்டு வளர்ந்து வரும் வெள்ளியணை பகுதி மக்கள் பயனடையும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நூலக கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

சிரமத்தை ஏற்படுத்துகிறது

வெள்ளியணையை சேர்ந்த பிரேம்குமார்:-

நான் படித்து முடித்த பின் மத்திய அல்லது மாநில அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் அதற்காக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை எழுத தயாராகி வருகிறேன். அதற்கு பொது அறிவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதை அறிந்து கொள்ள பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டி உள்ளது. அந்த புத்தகங்களை விலை கொடுத்து என்னால் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. நல்வாய்ப்பாக இந்த நூலகத்தில் அந்த மாதிரி புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது.

அவற்றை எடுத்து படித்து, அதில் இருந்து குறிப்புகளை எடுக்க அமர்ந்து படிக்க வேண்டி உள்ளது. ஆனால் இந்த நூலகத்தில் அதற்கான இட வசதியோ, மேஜை, நாற்காலி வசதியோ இல்லை. இது நான் மட்டும் இல்லாமல் என்னை போன்ற பலருக்கும் மிகுந்த சிரமத்தை தருகிறது.இந்த நூலகத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கியுள்ள அரசு, அந்த புத்தகங்களை படிக்க தேவையான வசதியையும் செய்து தர வேண்டும்.

புதிய கட்டிடம் வேண்டும்

திருமலைநாதன்பட்டியை சேர்ந்த தினேஷ் குமார்:-

வேலைக்கு செல்லும் நான் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்க நூலகத்திற்கு செல்கிறேன். ஆனால் இந்த நூலகத்தில் அமர்ந்து படிக்கவும், உள்ளே சென்று புத்தகங்களை தேடி எடுத்து வருவதற்கும் போதுமான இடவசதி இல்லாததால், டீக்கடையில் படிப்பது போல் வெளியில் நின்று செய்தித்தாள்களை மட்டும் படித்துவிட்டு வருகிறேன்.

என்னை போன்றவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்து என்ன பயன்? அவற்றை எடுத்து படிக்க போதுமான வசதிகள் வேண்டாமா ? எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என என் போன்ற இளைஞர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

வீட்டில் படிக்க முடியவில்லை

வெள்ளியணையை சேர்ந்த ராஜு:-

இந்த நூலகத்திற்கு என்னை போன்ற படித்த பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் வந்து பொது அறிவை வளர்த்து போட்டி தேர்வுகளை எழுத வேண்டும் என்பதுதான் ஆசையாக உள்ளது. வீட்டில் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதியான முறையில் அமர்ந்து படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் தான் நூலகத்திற்கு வருகிறோம். ஆனால் இங்கு அமர்ந்து படிக்க கூடிய வகையில் இட வசதி முற்றிலும் இல்லை. டீக்கடையில் நின்று கொண்டு செய்தித்தாள்கள் வாசிப்பது போல் தான் நூல்களை படிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதில் 2 மணி நேரம், 3 மணி நேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பது எங்கே? எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாலமான வசதிகள் கொண்ட நூலகத்தை அமைத்து தர வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story