தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும்


தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும்
x

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் கோரிக்கை மனு பதிவு செய்யப்படும் இடத்தில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் கூட்ட அரங்கும் நிரம்பி வழிந்தது.

அதன்படி கலெக்டர் அலுவலகம் வந்த காது கேளாத, முடியாத மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் விசாகனிடம் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் நலனுக்காக சைகை மொழி பெயர்ப்பாளரை நியமனம் செய்ய வேண்டும். மாத உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

ரத்து செய்ய வேண்டும்

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொடுத்த மனுவில், தற்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாணார்பட்டியை அடுத்த கோட்டக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஓராண்டாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

திண்டுக்கல்லை அடுத்த ராகலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன், நத்தத்தை அடுத்த பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், பாப்பாபட்டியில் மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 220 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story