சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 31-ந் தேதி முதல் 130 ஸ்மார்ட் செல்போன்கள் காணாமல் போனதாகவும், இணையதளம் மூலமாக பணம் மோசடி நடைபெற்றதாகவும் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வி.பி.கணேசன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில்நுட்பம்), சதீஷ்குமார், போலீசார் வேல்முருகன், முத்துசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் காணாமல்போன செல்போன்களில், சுமார் 4 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களையும், இணையதளம் மூலமாக பல்வேறு வகையில் பணத்தை இழந்தவர்களில், 6 பேருக்கு இழந்த தொகையான மொத்தம் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 500-யையும் மீட்டனர். அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் 65 செல்போன்களையும், ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 500-ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார். பொதுமக்கள் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதியவும் என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.