ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோதுதண்ணீரில் தத்தளித்த 2 என்ஜினீயர்கள் மீட்பு
பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் தத்தளித்த 2 என்ஜினீயர்களை போலீசார் உயிருடன் மீட்டனர்.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுஷ் ஜெயின் (வயது 24). இவரது தோழி கோமலிகுமாரி (21). என்ஜினீயர்கள். இவர்கள் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நண்பர்கள் 2 பேருடன் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த நண்பர்கள் 4 பேரும் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ஆயுஷ் ஜெயின், கோமலி குமாரி ஆகிய 2 பேரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர்.
தீவிர சிகிச்சை
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன், ஊர்காவல் படை வீரர் ராகுல் ஆகியோர் விரைந்து வந்து காவிரி ஆற்றில் தண்ணீரில் தத்தளித்த 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆயுஷ் ஜெயின் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் போலீசார் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரை பணயம் வைத்து 2 பேரை காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.