கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு; இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு
வாணியம்பாடியில் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்டகப்பட்டது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகைக்கடை பஜார் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அந்த கோவிலை ஒரு அறக்கட்டளை நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான 189 சதுர அடி கொண்ட இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
அந்த இடத்தில் அவர் உணவகம் நடத்தி வந்த நிலையில், திடீரென உணவகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் புதிதாக செல்போன் கடை வைக்கப்போவதாக கூறி கட்டிடம் கட்ட கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கோவில் இடத்தை காலி செய்யுமாறு கூறினர்.
ஆனால், அவர் காலி செய்யாததால் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் இடத்தை மீட்டனர். அப்போது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசாா் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.