தமிழ் வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்வானவர்களுக்கு பணியமர்த்தல் ஆணை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 26.7.2017-ம் நாள் வெளியிடப்பட்டு, 23.9.2017-ம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசியர்கள் கடந்த 2019-ம் ஆண்டும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020-ம் ஆண்டும் நிரப்பப்பட்டன. ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. அதன் படி தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
ஆனால், திடீரென ஒரு நாள் அந்தப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டு விட்டது. புதிய பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டால், அதிலும் தங்களின் பெயர் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தகைய சூழலில் வேறு போட்டித் தேர்வுகளையும் எழுத மனமில்லாமல், ஐந்தாண்டுகளாக தேர்வர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எனவே, தமிழ் வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.