கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு: காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் - பெண்கள் உள்பட 51 பேர் கைது


கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு: காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் - பெண்கள் உள்பட 51 பேர் கைது
x

கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதால பொதுமக்கள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் இணைந்து திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் ஒரு தரப்பினர் பால்குடம் எடுத்து, அன்னதானம் வழங்குவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், சமாதான கூட்டத்தில் சம்மதித்துபோல் இருதரப்பினரும் கூடி இதுதொடர்பாக முடிவெடுக்கவில்லை என்று கூறி மற்றொரு தரப்பினர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்க தயாராக இருந்தவர்கள், "எங்களை குலதெய்வ கோவிலுக்கு பால் குடம் எடுக்கவும், அன்னதானம் வழங்கவும் அனுமதிக்கவில்லை" என்று கூறி கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே பால்குடம் எடுக்க வாங்கிய பால், அன்னதானத்திற்காக நறுக்கப்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்களை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

1 More update

Next Story