வேலூர் வங்கி அதிகாரி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு -ஐகோர்ட்டு உத்தரவு


வேலூர் வங்கி அதிகாரி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
x

நாடாளுமன்ற தேர்தலின்போது, வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வங்கி அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, வேலூர் தொகுதியில், தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, அவரது வீடு, அலுவலகத்திலும் மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது, தாமோதரன், விமலா ஆகியோரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், இந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் தன்னுடையது என்றும், தன் மைத்துனர் தாமோதரனிடம் கொடுத்து வைத்திருந்ததாக தொழிலதிபர் சீனிவாசன் என்பவர் முறையிட்டார்.

சி.பி.ஐ. வழக்கு

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாமல், ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை கொடுத்து புதிய ரூ.200 நோட்டுகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த நடவடிக்கையில் விதிமீறல் உள்ளதாக கூறி வேலூர் கனரா வங்கி அப்போதைய மூத்த மேலாளர் தயாநிதி உள்ளிட்டோர் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, தயாநிதி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

தள்ளுபடி

அதில், "வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவோ ரூபாய் நோட்டுகள் மாற்றப்படவில்லை. அதனால், என் மீது மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அவசர கதியில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "ஆவணங்களில் முறைகேடு செய்து வங்கியின் பணத்தை மாற்றியது ரிசர்வ் வங்கி விதிகளை மீறி செயலாகும். அதனால், மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்யமுடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டு உள்ளார்.


Next Story