ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது


ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது
x

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

விவசாய நிலம் வாங்க...

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே காட்டூர் விண்ணகரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மாநகராட்சி, நகராட்சி‌, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.

திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியனின் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார்.

லஞ்சம் கேட்டார்

இதையடுத்து அசோக்குமார், அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, தான் வாங்க இருக்கும் விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார்.

அப்போது, சார் பதிவாளர் பாஸ்கரன், அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக 47(ஏ) படி பத்திரம் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுத்தால்தான் விவசாய நிலமாக பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின்படி நேற்று சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.1 லட்சத்தை அசோக்குமார் வழங்கினார்.

அந்த பணத்தை பாஸ்கரன் பெற்றபோது, அவரை அங்கு மறைந்திருந்த போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகள்

சார் பதிவாளர் பாஸ்கரன் பணியிட மாற்றம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திருவெறும்பூர் சார் பதிவாளராக பொறுப்பேற்ற நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், அலுவலகத்தில் அவர் இருக்காமல், அவரது இருக்கையில் வேறு யாரையாவது அமர வைத்துவிட்டு வெளியே சென்றுவிடுவார் என்றும் புகார் கூறப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story