வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒத்திகை
தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள வசதியாக ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள வசதியாக ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வடகிழக்கு பருவ மழை
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பாக வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பாக மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் ஒத்திகை நேற்று நடந்தது. இதில் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
தீயணைப்பு துறையின் ரப்பர் படகு, லைப்பாய், லைப் ஜாக்கெட் மற்றும் மீட்புப்பணிகளுக்கு உதவும் பவர்ஷா, கான்கிரீட் கட்டர் மற்றும் பல்வேறு உபகரணங்கள் மூலம் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது போன்ற செயல்விளக்கம் தீயணைப்பு வீரர்களால் பள்ளி மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
தீ விபத்து
மேலும், தீ விபத்தின் வகைகள் குறித்தும் அதனை எவ்வாறு அணைப்பது குறித்தும் விளக்கப்பட்டது. வீடுகளில் எளிதில் கிடைக்கக் கூடிய காலி தண்ணீர்குடங்கள், தண்ணீர்பாட்டில், ரப்பர் டியூப், வாழைமட்டை மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை மிதவைகளாக பயன்படுத்தி எவ்வாறு வெள்ளநீரில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற செயல்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் தென்மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மதுரை மாவட்ட அலுவலர் வினோத், உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி, சுரேஷ்கண்ணன், நிலைய அலுவலர்கள் அசோக்குமார் (தல்லாகுளம்), கந்தசாமி (அனுப்பானடி) ஆகிய தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையங்களை சார்ந்த நிலைய அலுவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.