ரேக்ளா பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

தூங்காவியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ரேக்ளா பந்தயம்
நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவியில் இராமேகவுண்டன்புதூர், துங்காவி ஊர்பொதுமக்கள், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைந்து நடத்திய மாபெரும் ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது.
ரேக்ளா பந்தயத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகளை பொதுமக்கள் உற்சாகக் குரலெழுப்பி ஊக்கப்படுத்தினர்.
தங்க நாணயம் பரிசு
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் பரிசுகளை வழங்கினார். 200 மீட்டர் பந்தயத்தில் முதல் பரிசு பெற்ற பொள்ளாச்சி கெட்டிமல்லன்புதூரைச் சேர்ந்த சிவராம்குமாருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 1 பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 300 மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்ற கிணத்துக்கடவு முத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு 1 பவுன் தங்க நாணயம் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி சார்பில் வழங்கப்பட்டது.
200 மற்றும் 300 மீட்டர் போட்டிகளில் 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா அரை கிராம் தங்க நாணயம் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.எஸ்.தங்கராஜ் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா 8 கிராம் வெள்ளி நாணயம் மாவட்ட அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் த.கவுதம்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.