விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
வாணியம்பாடி அருகே நடந்த கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து பொதுமக்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அருகே நடந்த கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து பொதுமக்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயி கொலை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்கின்ற சோழன் (வயது 62) என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 17 வயது சிறுவன் போலீசில் சரணடைந்தார். அவரது தந்தை மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக மகேந்திரன் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவரின் கணவர் பாரி, அவரது தந்தை வெங்கடாசலம், நன்னேரி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், முரளி, மூர்த்தி, பிரபு ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டதாக, கொலை செய்யப்பட்ட சோழனின் மனைவி பூங்கோதை அளித்த புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் இவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இந்த நிலையில் கொலைசெய்யப்பட்ட ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரையில் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, ராமூர்த்தியின் உறவினர்கள், பொதுமக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத்தை கைவிடாததால் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்று சென்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியுடன் 'டிக் டாக்'
சோழன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் கத்தியுடன் டிக் டாக் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அந்த சிறுவன் பயங்கரமான வெட்டுக்கத்தி ஒன்றை கையில் வைத்துக் கொண்டு கானா பாடல்களுக்கு டிக் டாக் செய்துள்ளார்.
அந்த பாடலில் 'நான் ஆசைப்பட்டு தொங்கவிட்டேன் இடுப்புல... நான் வெட்டுனா யாரும் பிழைக்கல.. என்ன வெட்ட யாரும் பிறக்கல... நான் சாண பிடிச்சு வைச்சுருக்கேன் கத்திய... எனக்கு பிடித்தது ரத்த வாசம்.. எனக்கு ஒண்ணுனா கத்தி பேசும்...' என்ற வரிகளுக்கு ஏற்ப கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்தபடி கத்தியை சிறுவன் சுழட்டுகிறான். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.