இறந்தவரின் உடலை மயானத்தில் புதைக்க இடம் கேட்டு உறவினர்கள் போராட்டம் - போலீசார் தடியடி


இறந்தவரின் உடலை மயானத்தில் புதைக்க இடம் கேட்டு உறவினர்கள் போராட்டம் - போலீசார் தடியடி
x
தினத்தந்தி 3 Oct 2023 4:03 AM GMT (Updated: 3 Oct 2023 5:38 AM GMT)

இறந்தவரின் உடலை மயானத்தில் புதைக்க இடம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் மாசநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி ராமகிருஷ்ணாபுரம். இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு பெருமாள் என்பவர் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அப்போது அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்தில் போதிய இடவசதி இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கோபமடைந்த அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இறந்தவரின் உடலை இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்யுமாறு அறிவுத்திய போலீசார் போக்குவரத்தையும் சரி செய்தனர்.


Next Story