தனியார் நிதி நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்


தனியார் நிதி நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்
x

தனியார் நிதி நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை செய்தார். கடன் தொல்லைக்கு காரணமான, அதிக வட்டி வசூலித்த தனியார் நிதி நிறுவனத்துக்கு முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை

திருப்பூர் அங்கேரிப்பாளையம் செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 44). இவர் பெயிண்டராகவும், உணவக தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மாலை கூலிபாளையம் நால் ரோடு அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர் ரெயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ராஜேஷ்கண்ணன் சட்டைப்பையில் கடிதம் இருந்தது. அதில் ' எனது மனைவி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியதில் பணம் கட்ட முடியாததால் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும், சாவுக்கு காரணம் பஜாஜ் பைனான்ஸ் தான்' என்றும், அவருடைய முகவரியையும் தெரிவித்திருந்தார்.

சாலைமறியல்

இந்த நிலையில் நேற்று மதியம் ராஜேஷ் கண்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் குமார் நகரில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துக்கு திரண்டு வந்தனர். பஜாஜ் பைனான்சில் ராஜேஷ் கண்ணன், தனது மனைவி பெயரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.1¼ லட்சம் கடன் வாங்கியதாகவும், முறையாக தவணை செலுத்தி வந்தநிலையில், கொரோனா காலத்தில் வேலையில்லாமல் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தவணை தொகையை முழுவதும் செலுத்திய பிறகு அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதிகப்படியான வட்டியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் நிறுவனத்தின் தரப்பில் சரியாக பதில் அளிக்கவில்லை என்றுகூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உறவினர்கள் அவினாசி ரோட்டில் மதியம் 3 மணியளவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவினாசி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வாகனங்கள் அனைத்தும் 60 அடி ரோடு வழியாக பி.என்.ரோட்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

உரிய நடவடிக்கை

போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் வடக்கு போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்தனர். இதனால் ½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story