சங்கராபுரத்தில் காயங்களுடன் தொழிலாளி பிணம் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினா்கள் மறியல்
சங்கராபுரத்தில் காயங்களுடன் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் புதுகாலனியை சேர்ந்தவர் ராமு மகன் துரை (வயது 43). இவர் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜீவா(39). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். துரை நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி பின்புறம் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் துரையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்றும், அதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், அவருடைய உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையேற்ற உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.