மேல்நீரார் அணையில் இருந்து ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதிக்கு தண்ணீர் திறப்பு


மேல்நீரார் அணையில் இருந்து ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகள் தாகம் தீர்க்க மேல்நீரார் அணையில் இருந்து ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வனவிலங்குகள் தாகம் தீர்க்க மேல்நீரார் அணையில் இருந்து ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழக-கேரள நதிநீர் ஒப்பந்தம்

வால்பாறை பகுதியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் அணைகளாக விளங்கும் சோலையாறு அணை, மேல்நீரார் அணைகளில் இருந்து ஆண்டுதோறும் தமிழக-கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி சோலையாறு அணையில் இருந்து தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையில் 12.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இது அந்த ஆண்டில் கிடைக்கக்கூடிய மழையின் அளவை பொறுத்து ஆண்டு இறுதிக்குள்ளாவது கொடுக்கப்பட வேண்டும்.

தமிழக-கேரள மற்றொரு நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதி செழிப்பு மற்றும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க மேல்நீரார் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் மட்டும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை திறந்து விடப்படும்.

தண்ணீர் திறப்பு

அதன்படி நேற்று காலை 8 மணிக்கு வால்பாறை பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சின்ராஜ் தலைமையில் பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் கிருபாகரன் மற்றும் கேரள மாநில நீர் ஆதாரத்துறை செயற்பொறியாளர், பொறியாளர்கள் முன்னிலையில் மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அந்த தண்ணீர் காலை 9 மணியளவில் கீழ் நீரார் அணையை வந்தடைந்தது. அதன் பின்னர் தமிழக-கேரள நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கீழ் நீரார் அணையின் ஆற்று மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 83 கன அடி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story