கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி- செங்கல்பட்டு கலெக்டர் தகவல்


கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி- செங்கல்பட்டு கலெக்டர் தகவல்
x

கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

வல்லுனர் குழு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று இந்திய பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த உண்மை, அது உடனடி விளைவுகளை மட்டுமல்லாது, குறுகிய மற்றும் நடுத்தர கால பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டால் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன, சில்லறை விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் அக்கறை கொண்ட தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை பரிந்துரைக்க ஒரு வல்லுனர் குழுவை அமைத்து, அந்த குழு தனது அறிக்கையை இறுதி செய்து அளித்துள்ளது. அதன் பரிந்துரைகளில் ஒன்றை செயல்படுத்தும் முனைப்பில், தொழில் முனைவோருக்கான கொரோனா தொற்று- 19 உதவி மற்றும் நிவாரணம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அரசு வடிவமைத்து அறிவித்துள்ளது.

இந்த திட்டம் 2 வெவ்வேறு கூறுகளை கொண்டது. கூறு- 1 இன் கீழ், கொரோனா தொற்று -19 பரவலால் வணிகரீதியாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள், தனியுரிமை அல்லது பங்குதாரர் அலகுகள், தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் செய்ய அல்லது ஒரு புதிய நிறுவனத்தை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கான உதவியை பெறலாம். இந்த திட்டத்திற்கான திட்டச் செலவு அதிகபட்சமாக ரூ.5 கோடியாக இருக்கலாம். எந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த உதவி பெற, பயனாளர் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

மானிய உதவி பெறுமாறு

கூறு 2-ன் கீழ், மாநிலத்தின் எந்த பகுதியிலும் அமைந்தியங்கி கொரோனா தொற்று -19 ல் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு நவீனமயமாக்கலை மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படும். இதற்கென கொள்முதல் செய்யப்படும் எந்திரம் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

ஆர்வமும் தகுதியும் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மானிய உதவி பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பத்தை இணைய வழியாக msmeonline.tn.gov.in ல் பதிவிடலாம். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை பொது மேலாளர், மாவட்டதொழில் மையம், ஏகாம்பரனார் தெரு, வேதாச்சலம் நகர், செங்கல்பட்டு என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Next Story