காட்டு யானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4½ லட்சம் நிவாரண உதவி
வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4½ லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
வள்ளிமலை
காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த பெரிய போடிநத்தம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி வசந்தா (வயது 57). இவர் கடந்த மாதம் 31-ந் தேதி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் ரூ.50 ஆயிரம் அன்று வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார்.
பின்னர் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையில் மீதமுள்ள ரூ.4½ லட்சத்திற்கான காசோலையை வசந்தாவின் கணவர் பாலகிருஷ்ணனிடம் அவர் வழங்கினார்.
மேலும் வசந்தாவின் மகன் கார்த்திக்கு 2 மாதத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் அமலுவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.