வாணியம்பாடியை சேர்ந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
ஓசூர் அருகே நடந்த பட்டாசு விபத்தில் இறந்த வாணியம்பாடியை சேர்ந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
13 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்ற ஏசு என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 24), மேகநாதன் மகன் நித்தீஷ் (26), கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜேஷ் (20), வெங்கடேசன் மகன் தினேஷ் (17), மற்றொரு வெங்கடேசன் மகன் சஞ்சய் (17), மேகநாதன் மகன் சூர்யா (22), வெங்கடேசன் மகன் நரேஷ் (19), பாஸ்கர் மகன் சரவணன் (26), அதே கிராமத்தில் உள்ள அருந்ததி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சஞ்சய் (20), ராஜமாணிக்கம் மகன் பிரசாந்த் (17) ஆகியோர் கடந்த ஒரு மாதமாக தமிழக-கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
2 பேர் வாணியம்பாடியை சேர்ந்தவர்கள்
இவர்களில் சந்தோஷ், நித்தீஷ் ஆகிய இருவரும்அடங்குவர். இவர்களுடன் வேலைக்கு சென்ற ராஜேஷ், தினேஷ், சஞ்சய் ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்துள்ளனர்.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாவட்ட கலெக்டர் சரயு ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிவாரண உதவி
அதனை தொடர்ந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வாணியம்பாடியை அடுத்த வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ், நித்திஷ் ஆகியோர் குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.
இதேபோல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷ்குமார், ராஜேஷ் குமார் ஆகியோருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதி உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
அதனை தொடர்ந்து உடல்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்களது உடல்கள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.