இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
நாட்டு வெடி ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இந்திய மருத்துவம்
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆங்கில மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இந்திய மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் வாழ்வியல் மையங்களை மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த அரசு இந்திய மருத்துவத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செங்கல்பட்டில் ரூ.100 கோடியில் சர்வதேச யோகா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. ஆங்கில மருத்துவத்தை போல இந்திய மருத்துவத்திற்கும் இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சித்தா, யுனானி, யோகா மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
மருத்துவ கவுன்சில் தேர்தல்
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டதோடு உள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அமைப்பு செயல்படாமல் உள்ளது. மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தாமல் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமலும், தலைவர் நியமிக்கப்படாமலும் உள்ளது. வார்த்தை ஜாலங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறை என்பது கண்ணும், கருத்துமாக மக்களை பார்த்து கொள்ள வேண்டிய துறை சுகாதாரத்துறை தொடர்ந்து விமா்சனத்திற்குள்ளாகி வருகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. அரசு இதனை தவிர்த்து ஆக்கப்பூர்வமான துறையாக நடத்த வேண்டும்.
நிவாரணம் வழங்க வேண்டும்
புதுக்கோட்டையில் நாட்டு வெடி ஆலை விபத்து சம்பவம் குறித்து அறிந்ததும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு பேசினேன். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழை கூலித்தொழிலாளிகளான இவர்களது குடும்பத்திற்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள் நேரில் சென்று ஒரு ஆறுதல் கூட கூறவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஒரு ஆறுதல் தெரிவிக்கவில்லை. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மக்கள் நலனில் மாவட்ட அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
பணி நியமனம்
எம்.ஆர்.பி. மூலம் ஒரு ஆண்டுக்கு 4 ஆயிரம் டாக்டர்களை அ.தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்தோம். ஆனால் ஒரு ஆண்டுக்கு 400 மருத்துவர்களை கூட இவர்கள் நியமிக்கவில்லை. 1,200 மருத்துவர்கள் நியமனத்தில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.