ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 29 வீடுகள் அகற்றம்

திண்டிவனம் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 29 வீடுகள் அகற்றப்பட்டன.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே மேல்பாதி கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமாக 8 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நீர்வளத்துறை பாசன பிரிவு உதவி பொறியாளர் மோகனராமன், திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தசரதன் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஏரி ஆக்கிரமிப்பை பார்வையிட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம், ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 29 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட 29 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று வருவாய்த்துறையினர் கூறினர். ஆக்கிரமிப்பு அகற்றியபோது இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, லட்சுமி, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






