ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அந்நிய மரங்களை அகற்ற வேண்டும்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்


ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அந்நிய மரங்களை அகற்ற வேண்டும்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:30 AM IST (Updated: 5 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அந்நிய மரங்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு கட்டமைப்புகள் எற்படுத்தப்பட்டது. அப்போது வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட யூகலிப்டஸ் உள்ளிட்ட அந்நிய மரக்கன்றுகள் அரசு அலுவலகங்கள், சாலையாரங்களில் நடப்பட்டன. இதனால் உள்ளூரில் செடிகள், மரங்கள் வளர்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்நிய தாவரங்கள் அதிக தண்ணீரை உறிஞ்சுகிறது.

இதனால் நீர்வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உணவு மற்றும் நீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், நீலகிரி வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

அகற்ற வேண்டும்

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் அந்நிய மரங்கள் உள்ளன. இதனையும் அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஜனார்த்தன், சிவதாஸ் கூறியதாவது:-

நீலகிரியில் மழைக்காலங்களில் யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் அடிக்கடி சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகம், ஸ்பென்சர் சாலை பகுதியில் குப்ரசஸ், சைப்ரஸ் (சாம்பிராணி), பைன் உள்ளிட்ட அந்நிய மரங்கள் உள்ளன. இவை ஆபத்தான நிலையில் உள்ளது. ஸ்பென்சர் சாலையோரம் இதற்கு முன்னர் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மூலம் சாலையோர பூங்காவாக பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே, அந்நிய மரங்களை அகற்றி, அந்த இடங்களில் சோலை மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னர் இந்த மரங்களை அகற்ற வேண்டும். மேலும் வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவது போல், நகர் பகுதியில் அந்நியய மரங்களை அகற்றும் நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story