கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

மானூரில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் மெயின் ரோடு பகுதியில் பாட்டக்கால்வாய் எனும் பெரிய பாசன கால்வாய் உள்ளது. இதன்மூலம் கோவில் நிலம் 130 ஏக்கர் மற்றும் தனியார் நிலம் என மொத்தம் 300 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் நடந்து வருகிறது. இந்த கால்வாயின் புறம்போக்கு பகுதியில், அரசு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி உள்ளது. எனவே கால்வாய் புறம்போக்கு என்றிருந்த ஆவணங்கள் நத்தம் புறம்போக்கு என மாற்றம் செய்யப்பட்டது. இதைப் பயன்படுத்தி இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்கள், கால்வாய் முழுவதையும் செட் மற்றும் காம்பவுண்டு சுவர் என அமைத்து ஆக்கிரமிப்பு செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், கலெக்டரிடம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றித்தர முறையிட்டனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுசெய்து கால்வாய் மீட்கப்படாமல் தடை செய்தனர். வருவாய் துறை மூலம் உண்மை நிலையை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதோடு, கலெக்டரின் நீராதார ஆக்கிரமிப்பை அகற்றும் சிறப்பு அதிகாரத்தின் மூலம் மேற்படி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய அறிவிப்புகள் செய்யப்பட்டு நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது மானூர் தாசில்தார் முத்துலட்சுமி, துணை தாசில்தார் முருகேசன், தலைமை சர்வேயர் செல்வி, வருவாய் ஆய்வாளர் கஸ்தூரி, கிராம நிர்வாக அலுவலர் ராசையா, சர்வேயர் கார்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story