கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் அகற்றும் பணி
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தால்(சி.பி.சி.எல்.) நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் போடப்பட்ட கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாய் அகற்றும் பணி தொடங்கியது.
நாகூர்:
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தால்(சி.பி.சி.எல்.) நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் போடப்பட்ட கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாய் அகற்றும் பணி தொடங்கியது.
கச்சா எண்ணெய் கசிவு
நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதில் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் மட்டும் இன்றி சாமந்தான்பேட்டை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மாசு ஏற்பட்டது. இதனால் கடற்கரையை ஒட்டி பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் வலியுறுத்தினர். மேலும் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கலெக்டர் அருண்தம்புராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மறு உத்தரவு வரும் வரை இந்த குழாய் வழியாக எந்தவித பயன்பாடுகளும் இருக்க கூடாது என உத்தரவிட்டார்.
குழாயை அகற்ற நடவடிக்கை
தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்புகளை ஆய்வு செய்தார். மேலும் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதையடுத்து நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் நாகப்பட்டினம் தாலுகாவை சேர்ந்த 7 கிராம மீனவர்கள், சி.பி.சி.எல். ஆலை நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அகற்றும் பணி
அப்போது மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் குழாயை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.எல். நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உறுதி அளித்தனர். அதன்படி கடற்கரையை ஒட்டி பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட ராட்சத குழாயை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணியை சி.பி.சி.எல். தொழிலாளர்கள் நேற்று தொடங்கினர். மேலும் பணிகள் விரைவில் நிறைவு பெறும் எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இதனால் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.