கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு


கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு
x

கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம் மற்றும் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதி, பாலப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வருடமாக வெட்ட வெளியிலும், கூடாரங்கள் அமைத்தும், பெட்டி கடைகளாகவும் காய்கறி மற்றும் பூக்கடை, பழக்கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகள் பெருகியதால் புதுப்பட்டினத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகளால் பஸ்கள் நின்று செல்ல முடியாமல் இருந்து வந்த நிலையால், பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். நாளுக்கு நாள் பெருகி வந்த இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பெதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை மற்றும் புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் வனத்தாட்சி, புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிப்பு கடை வைத்துள்ளவர்களிடம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை நீங்களே அகற்றி கொள்ளுங்கள் என்று கேட்டு கொண்டு அவர்களுக்கு கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்கினர். அதில் ஒரு சிலர் கடைகளை அகற்ற முடியாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள், கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால், தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு

அப்போது பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார், அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததின் பேரில் எதிர்ப்பு தெரிவித்த கடைக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன் பிறகு புதுப்பட்டினம் பஸ் நிலையம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம், பாலத்தின் இரு பகுதி உள்ளிட்ட இடங்களில் இருந்த சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.


Next Story