பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்


பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கால அவகாசம் வழங்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஆக்கிரமிப்பு அகற்றம்


பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேற்கண்ட திருவிழாக்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. அதேபோல் சபரிமலை சீசன் தொடங்க உள்ளதால் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு படையெடுப்பது வழக்கம்.


இந்நிலையில் பழனி கிரிவீதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் கோவில் பணியாளர்கள் அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் கொண்டு நடைபாதையில் இடையூறாக வைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகளை அகற்ற முயன்றனர். இதற்கு அங்குள்ள வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென அவர்கள் கோவில் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


பேச்சுவார்த்தை


தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய அவகாசம் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றக்கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அடிவார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story