திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 16 May 2023 8:45 PM GMT (Updated: 16 May 2023 8:45 PM GMT)

திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ்நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகி கொண்டே இருக்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பஸ் நிலையத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி பஸ்கள் வெளியேறும் திருவள்ளுவர் சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று திருவள்ளுவர் சாலையை பார்வையிட்டனர். அப்போது ஒருசில கடைகளின் முன்பு சாக்கடை கால்வாய், சாலையோரத்தை ஆக்கிரமித்து படிக்கட்டுகள், சுவர்கள் கட்டப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

மேலும் சாலையோரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகளின் மேற்கூரையை பெயர்த்து அப்புறப்படுத்தினர். அதோடு ஆக்கிரமிப்பு செய்த கடைக்காரர்களை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். மேலும் இதேபோல் நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.


Next Story