சுவாமிநாதசாமி கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக இக்கோவில் கருதப்படுகிறது. முருகப்பெருமான் இக்கோவிலில் 'தகப்பன்சுவாமி' என அழைக்கப்படுகிறார்.
பிரணவ மந்திரத்தின் உட்பொருளை தகப்பனாகிய சிவபெருமானுக்கு முருகப்பெருமான் குருவாக இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்புகள்
இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு சிவன் மீனாட்சி சுந்தரேஸ்வரராக அருள்பாலித்து வருகிறார்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோவிலை சுற்றியும், கோவில் அருேக உள்ள பிரதான வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வாகனங்களில் வந்து செல்வது சிரமமாக இருந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இதனை தவிர்க்கும் வகையில் சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், கும்பகோணம் வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பேரூராட்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து முக்கிய வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.