பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடிக்கம்பம் அகற்றம்


பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடிக்கம்பம் அகற்றம்
x
தினத்தந்தி 21 Oct 2023 8:12 AM IST (Updated: 21 Oct 2023 10:06 AM IST)
t-max-icont-min-icon

பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடிக் கம்பத்தை போலீசார் அகற்றியுள்ளனர்.

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் இருக்கிறது. அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் அந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடி கம்பத்தை அகற்ற விடாமல் ஜேசிபியின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர், பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் எந்த வித சுமூகமான உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் பாஜகவினரை குண்டுகட்டாக கைது செய்து நீலாங்கரை, பனையூர் பகுதியில் இருக்கிற தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடி கம்பத்தை போலீசார் அகற்றி உள்ளனர். இதனை அகற்றும் போது பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story