சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

விழுப்புரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் எந்நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ளும்படி ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீசு கொடுக்கப்பட்டு கால அவகாசமும் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதையொட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த கூரைகள், படிக்கட்டுகள், மதில்சுவர்கள் மற்றும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் என 5 கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் விசாலமாக காட்சியளித்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story